மண்டையோட்டின் அடிப்பகுதியில் எண்டோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை : மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் 3 நாள் மருத்துவ மாநாடு

மண்டையோட்டின் அடிப்பகுதியில் எண்டோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை:
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் 3 நாள் மருத்துவ மாநாடு

· எக்ஸ்டெண்டட் எண்டோஸ்கோபிக் ஸ்கல் பேஸ் சர்ஜரி (Extended Endoscopic Skull Base Surgery) என்பது மண்டை ஓட்டைத் திறக்காமலே, எண்டோஸ்கோப் கருவி மூலம் மூளையின் ஆழமான பகுதியில் உள்ள கட்டிகளை அகற்றும் ஒரு நவீன சிகிச்சை முறையாகும்.
· நிபுணர்களின் விரிவுரைகள், உடலமைப்பு குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் இறந்த உடல்கள் மீது நேரடிப் பயிலரங்குகள் (Hands on cadaveric workshop) இந்த மாநாட்டில் இடம்பெறுகின்றன.

மதுரை, பிப்ரவரி 18, 2026: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ‘மீனாட்சி நியூரோஎண்டோகான் 2026’ என்ற பெயரில் சிறப்பு மருத்துவ மாநாட்டை நடத்துகிறது. மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் செய்யப்படும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் குறித்து தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பிரத்யேக மாநாடு இதுவாகும்.

இம்மாநாடு பிப்ரவரி 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் காது-மூக்கு-தொண்டை (ENT) மருத்துவத் துறையைச் சேர்ந்த இளம் மருத்துவர்களுக்கு, மூளையின் அடிப்பகுதியில் மிக ஆழமாக அமைந்திருக்கும் கட்டிகள் மற்றும் புண்களுக்குக் குறைவான ஊடுருவல் முறையில் சிகிச்சை அளிக்கும் நவீன நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மதுரை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டில், டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனர். மண்டை ஓட்டின் உள் அமைப்பு மற்றும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை முறைகள் குறித்த நேரடிப் பயிற்சிகளுடன், விரிவான விளக்கவுரைகளும் இதில் இடம்பெறும்.
மீனாட்சி மருத்துவமனை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டிகள் மற்றும் புண்களுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், 2017-ம் ஆண்டு முதல், தென் தமிழகத்தில் இந்த நவீன எண்டோஸ்கோபிக் சிகிச்சை முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் K. செல்வமுத்துக்குமரன் கூறியதாவது: “தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவில், தேசிய நிபுணர்களைக் கொண்டு மண்டை ஓட்டு அடிப்பகுதி சிகிச்சைக்காக ஒரு மாநாடு நடப்பது இதுவே முதல் முறை. வழக்கமான அறுவை சிகிச்சையைப் போலன்றி, இந்த ‘விரிவாக்கப்பட்ட’ முறை மிகவும் மேம்பட்டது. இதன் மூலம், மண்டை ஓட்டின் முன்பகுதி மற்றும் நடுப்பகுதி, மூளைத்தண்டுக்கு அருகில் உள்ள இடங்கள், மூக்கு மற்றும் சைனஸ் பகுதிகளுக்குப் பின்னால் உள்ள இடங்கள் மற்றும் தண்டுவடத்தின் மேல் எலும்புடன் (Upper spine) இணைந்திருக்கும் பகுதிகள் போன்ற மிகச் சிக்கலான இடங்களிலும் ஊடுருவி, கட்டிகளை அகற்றிச் சிகிச்சை அளிக்க முடியும்,” என்றார்.

உடல் உறுப்புகளின் அமைப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், இந்த நவீன சிகிச்சை முறைகளில் மருத்துவர்களின் திறனை மேம்படுத்தவும், இறந்த உடல்கள் மீது சிறப்புச் செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் K. செந்தில்குமார் கூறியதாவது: “மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் செய்யப்படும் நவீன எண்டோஸ்கோபிக் சிகிச்சை முறைகளைப் பிரபலப்படுத்துவதிலும், சிக்கலான மூளைக் கட்டிகளைக் கையாள்வதற்கான மருத்துவர்களின் திறனை மேம்படுத்துவதிலும் மீனாட்சி நியூரோஎண்டோகான் 2026’ முக்கியப் பங்காற்றும்” என்றார்.

இந்தத் தொழில்நுட்பங்கள் மூலம் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது மூளையின் உள்ளுறுப்புகளை மிகத் தெளிவாகப் பார்க்கவும், சரியான பாதையில் சென்று சிகிச்சையளிக்கவும் முடியும். இதனால், மூளையின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் கட்டிகளைக் கூட, அருகில் உள்ள நல்ல திசுக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் முழுமையாக அகற்ற முடியும். மேலும், இது குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சை என்பதால், நோயாளிகள் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப முடியும்,” என்று விளக்கினார்.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் D.R. நாகேஸ்வரன் பேசுகையில், “இந்த எண்டோஸ்கோபிக் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய, மூக்கு மற்றும் மண்டை ஓட்டின் உள்ளமைப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். பல்வேறு துறை மருத்துவர்கள் இணைந்து வழங்கும் இத்தகைய கூட்டுப் பயிற்சிகள், இளம் மருத்துவர்கள் பாதுகாப்பாகவும் திறம்படவும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் மருத்துவ நிபுணர் டாக்டர் கௌதம் குஞ்சா கூறியதாவது: “விரிவாக்கப்பட்ட எண்டோஸ்கோபிக் மண்டை ஓட்டு அடிப்பகுதி அறுவை சிகிச்சையானது, உடலில் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்டதாக இருந்தாலும், அதிகபட்ச பலன் அளிக்கக்கூடிய சிறந்த சிகிச்சை முறையாகும். இது நரம்பியல் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. இளம் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள், இந்த நவீன நுட்பங்களை நம்பிக்கையுடன் கையாளவும், அதில் முழுமையான தேர்ச்சி பெறவும், இது போன்ற நேரடிச் செய்முறைப் பயிற்சிகள் மிகவும் அவசியம்,”

‘மீனாட்சி நியூரோஎண்டோகான் 2026’ மாநாடு, மருத்துவர்களுக்கான ஒரு சிறந்த கல்வித் தளமாக அமைந்து, நோயாளிகளுக்கான சிகிச்சையின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்நிகழ்வில் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த திரு. திலீப் அவர்களும் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *