பெற்றோரை பராமரிப்பவருக்கு காஞ்சி பெரியவரின் அருள் உண்டு : மதுரையில் பட்டிமன்ற பேச்சாளர் பி. மணிகண்டன் பேச்சு
அழகர் கோயில் அடுத்துள்ள பொய்கைக் கரைப்பட்டியில், அனுஷத்தில் அனுக்கிரகம் டிரஸ்ட் சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு கட்டப்படும் கோயில், பூர்த்தி பெறும் நிலையில் உள்ளது.
கோயில் திருப்பணி மற்றும் தினமும் 300 ஆதரவற்றோர்க்கு அன்னம் வழங்கும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்டின் “நித்ய அன்னபூரணி’ திட்ட நன்கொடைக்காக சிறப்பு நிகழ்ச்சி, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெற்றது.
நிகழ்வில், ‘மகா பெரியவா எனும் பேரமுதம்’ என்ற தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர் பி. மணிகண்டன் பேசியதாவது;
எத்தகைய பாவம் இருந்தாலும், ஒரு வயிற்று பசியை ஆற்றும் is போது, அவை அனைத்தும் நீங்க பெற்று சந்ததி விருத்தி பெறும். கடந்த 6 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு அன்னம் வழங்கி வரும் அட்சய பாத்திரம் பணி மகத்தானது. ‘நித்திய அன்னபூரணி’ திட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து, நன்மைகள் கிடைக்கப் பெறுங்கள்.
காஞ்சி மகா பெரியவர், யாரும் பசியோடு இருப்பதை விரும்ப மாட்டார். மடத்திற்கு வரும் அனைவரையும் சாப்பிட்டு வரச் சொல்லி, பின்னர்தான் ஆசி வழங்குவார். காவியுடை தரித்த கருணைக்கடல் அவர். எந்தவித எதிர்பார்ப்பும் அவருக்கு கிடையாது.
பெரிய தொழிலதிபரான பிர்லா அவரை சந்திக்க வந்தபோது, தொகை நிரப்பாத காசோலையை கொடுத்தார். அதை ஏற்க மறுத்து, திரும்ப கொடுத்து விட்டார் காஞ்சி பெரியவர். பற்றற்ற துறவிக்கு அவரே முன்னுதாரணம்.
அவருக்கு பிடிக்கும் என சமையல்காரர் மீண்டும் மீண்டும் கீரை சமைக்கவே, அதன் பின்னர் அவர் வாழ்நாளில் கீரை சாப்பிடவே இல்லை. புலனடக்கத்தோடு, நாவடக்கத்தையும் கடைப்பிடித்த ஒரே பெரியவர் காஞ்சி மகா பெரியவர்.
மதுரையில் ஊர் கூடி கட்டும், மகா பெரியவர் கோயிலில் அவரது அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கும்” என்றார்.
விழாவில் பல துறைகளில் சிறந்து திகழும் 25 பேருக்கு, ‘அட்சய சேவா ரத்னா’ விருது வழங்கப்பட்டது. பி. மணிகண்டன், மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், நடிகர் வையாபுரி, எஸ்.வி.எஸ்., சூரஜ் சுந்தர சங்கர் ஆகியோர் விருதுகளை வழங்கினர். எழுத்தாளர் மு. ஆதவன், ரோட்டரி ஜல்லிக்கட்டு தலைவர் சண்முகம், ஜோசப், பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.