



33 ஆவது இயற்கை வாழ்வியல் முகாம்:
காந்தி அருங்காட்சியகத்தில் 33வது இயற்கை வாழ்வியல் முகாம் அருங்காட்சியகபத்தின் செயலாளர் கே .ஆர். நந்தாராவ் தலைமையில் நடைபெற்றன. இவர் தனது உரையில் “ஆரோக்கியமாக வாழ இயற்கை சார்ந்த நஞ்சில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அருங்காட்சியகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் மா. செந்தில் குமார், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். தேவதாஸ் ஆகியோர் இயற்கை வாழ்வியலின் முக்கியத்துவத்தை குறித்து பேசினர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஆயுக்ஷ் கன்சல்டன் இயற்கை மருத்துவர் எம். பிரியங்கா “ஆரோக்கியம் தரும் சிறுதானியங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில் “அரிசியை குறைத்துக் கொண்டு சிறுதானியங்களான வரகு, சாமை, குதிரைவாலி அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் யோகா, தியானப் பயிற்சிகள் செய்ய வேண்டும். அப்போது தான் முழுமையான ஆரோக்கியம் சாத்தியமாகும்” என்று கூறினார். தொடர்ந்து உளவியல் அறிஞர் எ. நாகராஜ் “மனம் செம்மையானால் ஆரோக்கியம் சாத்தியமே” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவர் தனது உரையில் “மனதை கவனித்தல் வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மனரீதியான பிரச்சனைகள் குறையும். மனம் பன்படும். அமைதி, ஆரோக்கியம் சாத்தியமாகும்” என்று கூறினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உலர் திராட்சை, நெல்லிக்காய், மதிப்பு கூட்டப்பட்ட அவல், முளைக்கட்டிய பயறு, சுக்கு மல்லி காபி, எள்ளு மிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக யோகா மாணவி பொன் சந்தியா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக யோகமானவர் வரதராஜன் நன்றியுரை வழங்கினார். முகாமில் அருங்காட்சியக யோகா ஆசிரியர்கள் திருமதி நந்தினி, பழனிக்குமார், பணியாளர் திருமதி தனபாண்டி, பொதுமக்கள், யோகா மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.