
தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் எம்.ஆர்.தினேஷ் சிங் விளக்கம் அளிக்கிறார். (படத்தில் இடமிருந்து) சங்க முன்னாள் மாநில செயலாளர் எம்.சிவானந்தம், மாநிலச் செயலாளர் கே.ராஜேந்திரன், மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரமோகன் ஆகியோர் உள்ளனர்.
சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!
தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் வரை சன்ன ரக நெல் தட்டுப்பாடு நீடிக்கும் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தினேஷ் சிங் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஆறு மாதங்களாக நெல் அறுவடை குறைந்து வருகிறது. குறிப்பாக, குருவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் சன்ன ரக நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேவையான அளவு சன்ன ரக அரிசி உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து முன்பு 100 சதவீதம் கிடைத்து வந்த சன்ன ரக அரிசி வரத்து தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ன ரக அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பெருவெட்டு அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. அது கிலோ ரூ.50-க்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் பருவமழை குறைவாக இருப்பதால் சன்ன ரக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சன்ன ரக நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சன்ன ரக அரிசி உற்பத்திக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களில் சன்ன ரக நெல் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். அறுவடை காலத்தில் நெல்லை உலர்த்துவதற்குத் தேவையான உலர்த்தும் இயந்திரங்களை (டிரையர்) வாங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விவசாயிகளிடம் சேவைக் கட்டணம் வசூலித்தால், அதற்கேற்ற சேவையை வழங்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நிலவும் சூப்பர் எல் நினோ உள்ளிட்ட காலநிலை பாதிப்புகளும் நெல் உற்பத்தியைப் பாதித்துள்ளன. வரும் ஜனவரி மாதம் வரை சன்ன ரக நெல்லுக்குத் தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கருதி பொதுமக்கள் அச்சத்தில் அளவுக்கு அதிகமாக அரிசி வாங்கி இருப்பு வைக்க வேண்டாம். போதுமான அளவு மற்ற வகை அரிசிகள் இருப்பில் உள்ளன. சன்ன ரக அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. என கூறினார்.