ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும்.

கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 5 ஆயிரம் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பாமல், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நிரந்தரப் பணியிடங்களாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகி சுஜாதா பேசுகையில்,

தமிழகத்தில் ஏராளமான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அந்தப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலை கிடைக்கும் என காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகளையும் இது சிதைக்கும்.

மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது. நிரந்தரத் தன்மையுள்ள பணியிடங்களை உருவாக்கி, MRB மூலம் வெளிப்படையான முறையில் நியமனம் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படையில் செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமித்தால் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகும் என்றும், முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

தற்காலிக பணியாளர்களை கொண்டு தரமான மருத்துவ சேவையை எவ்வாறு வழங்க முடியும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும், இது மருத்துவத்துறையை பாதிக்கும் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள செவிலியர்கள், சமூகநீதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறிவிட்டு, மாவட்ட நிர்வாக அடிப்படையில் நியமனம் செய்வது சரியான நடைமுறை அல்ல.

இந்த விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வரும் 28ஆம் தேதி மதுரை வரும் முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மேலும் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

“எங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டாம்; காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி MRB மூலம் நிரப்ப வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *