மதுரை மாநகரில் 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழை நீர்- இரவோடு இரவாக மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு தொகுதி எம் எல் ஏ

மதுரை மாநகர் செல்லூர், கோரிப்பாளையம் ,ரயில்வே நிலையம் ,சிம்மக்கல் ஆனையூர், மாட்டுத்தாவணி கே கே நகர் ,பழங்காநத்தம் தெற்கு வாசல் உள்ளிட்ட மாநகர் முழுவதிலும் 5 மணி நேரத்திற்கு மேலாக இரவில் கனமழை பெய்தது

இதனால் மதுரை மாநகரின் பிரதான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் பிரசாத் சாலை 60 அடி சாலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது

அங்கு பந்தல்குடி கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்ற பகுதியில் மழைநீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டது கண்டறியப்பட்டு அது சரி செய்யப்பட்ட பின்னர் மோட்டார் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது

இரவோடு இரவாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு நேரில் சென்ற மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை ஆகியோர் மழை நீரை வெளியேற்றும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்

தொடர்ந்து மதுரை ரயில்வே நிலையம் முன்பாக மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்த நிலையில் பேருந்து நிறுத்தத்திற்குள் மற்றும் ரயில்வே நிலையத்தில் முன் பகுதி முழுவதிலும் மழைநீர் சூழ்ந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் பாண்டி பஜார் மீனாட்சி பஜார் வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்கியது.

ரயில்வே நிலைய பேருந்து நிறுத்தத்தின் முன்பாக மழைநீர் தேங்கி நிலையில் வாகனங்கள் செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நீர்உறிஞ்சும் வாகனம் மூலமாக மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோன்று மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம், நரிமேடு, கோரிப்பாளையம் என பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்

இதே போன்ற மதுரை மாநகர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலங்களான தத்தனேரி, கர்டர் தரைப்பாலம், பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் ஆகிய தரைப் பாலங்களில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

தரைப்பாலங்களில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டன

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையாளர் கௌரவக்குமார் ;-

மதுரை மாநகர பகுதியில் 5 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்த நிலையில் மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் , நீர் உறிஞ்சும் வாகனம் மற்றும் மோட்டார்கள் மூலமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டது

மதுரை மாநகராட்சியில் 16 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன 32 வாகனங்கள் மூலமாக மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து மழை பெய்த போதிலும் இரவு நேரங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொது மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ரயில்வே நிலையம் பகுதி மற்றும் மாசி வீதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர திட்டமிடலுக்காக 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *